வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி சென்னையில் பல கோடி சுருட்டிய மோசடி கும்பல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது


வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி சென்னையில் பல கோடி சுருட்டிய மோசடி கும்பல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2020 10:15 PM GMT (Updated: 6 Feb 2020 10:11 PM GMT)

சென்னையில் போலி கால்சென்டர்கள் மூலம் தொடர்புகொண்டு வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி பணத்தை சுருட்டிய 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னை நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டில் செயல்படும் ஒரு போலி கால்சென்டர் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித்தருவதாக கூறி கமிஷன் தொகை பெற்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.

இந்த மோசடி கும்பல் கமிஷன் தொகை வாங்குவதற்காக கடன் கேட்டவர்களின் கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டி உள்ளது. விவரம் தெரியாமல் இந்த கும்பலிடம் ஓ.டி.பி. எண்ணை கொடுத்து பணத்தை இழந்த பொதுமக்கள் 15 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நங்கநல்லூரில் செயல்பட்ட போலி கால்சென்டரில் திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் மோசடிக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. போலி கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட செல்வபிரபு, சிவக்குமார், வினோத் மற்றும் தமிழ் செல்வி, ஆனந்தி, லாவண்யா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி செல்வகுமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Next Story