டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தயாரா? - அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தயாரா? - அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 7 Feb 2020 9:30 PM GMT (Updated: 7 Feb 2020 7:42 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தயாரா? என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டிய தமிழக அரசும், அமைச்சர்களும் சிறிதும் நாணமின்றி நடமாடி வருகிறார்கள். குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ ஆகியவை குறித்த செய்திகளை வெளியிட்டு, ‘தமிழக அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடு ஆகும். இந்த ஊழலை அப்படியே மறைக்க தமிழக அரசு ஆலாய்ப் பறக்கிறது. ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விசாரணை அதிகாரி செங்குட்டுவன், நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த தேர்வர்களான 74 பேரில், 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று முறைகேடாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பற்றி ஐகோர்ட்டில் விவாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான காவல் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

3 விசாரணை அதிகாரிகளை மாற்றி, 3 நீதிபதிகள் மாறும்வரை காத்திருந்து, தமிழக அரசு செய்த தில்லுமுல்லான காரியங்கள் அனைத்தும், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சில நபர்களை காப்பாற்றுவதற்குத்தான் என்பது அறிய முடிகிறது.

குரூப்-1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான்’ என்று உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story