தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு


தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2020 12:00 AM GMT (Updated: 7 Feb 2020 11:50 PM GMT)

தமிழக பட்ஜெட் வரும் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபை முதல் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த கூட்டம் ஜனவரி 9-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து வரும் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் நேற்றிரவு வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பேரவை தலைவர் கூட்டியுள்ளார். 2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அ.தி.மு.க. அரசால் தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள், வரி சலுகைகள் இடம் பெறும் என்று தெரிகிறது.

14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடக்கும். பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் இந்த மானியக்கோரிக்கை மீதான விவாதமும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. எனவே மார்ச் மாதம் இறுதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது.

Next Story