நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனை விசாரிக்க சம்மன் -வருமான வரித்துறை முடிவு


நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனை விசாரிக்க சம்மன்   -வருமான வரித்துறை முடிவு
x
தினத்தந்தி 8 Feb 2020 11:29 PM GMT (Updated: 8 Feb 2020 11:29 PM GMT)

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரிடம் சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை, 

சினிமா பைனான்சியர் மதுரை அன்புசெழியனின் வீடு மற்றும் அலுவலகங்கள், பிகில் படத்தின் தயாரிப்பாளரும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் பங்குதாரருமான கல்பாத்தி எஸ்.அகோரம் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் நடிகர் விஜய் வீட்டிலும் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அன்புசெழியனின் வீட்டில் இருந்து ‘பிகில்’ திரைப்படத்திற்கு நிதி உதவி அளித்ததற்கான ஆவணங்கள், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.77 கோடி ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கல்பாத்தி எஸ்.அகோரம் வீட்டில் இருந்து பிகில் திரைப்படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கிய பட்டியல் மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகள் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்

இந்த நிலையில் அன்புசெழியனின் வீட்டில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய இந்த சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது. நேற்று அதிகாலை இந்த சோதனை முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையும் நேற்று அதிகாலை நிறைவடைந்தது.

பைனான்சியர் அன்புசெழியன், ஏ.ஜி.எஸ். குழுமத்திற்கு தொடர்ந்து பைனான்ஸ் செய்து வந்தது இந்த சோதனையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் பினாமி பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 4 நாட்களாக நடந்த சோதனையில் பல ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

நகை மதிப்பு எவ்வளவு?

அன்புசெழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் பறிமுதல் செய்த சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். அந்த தகவலை டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அன்புசெழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு முறையாக சம்மன் அனுப்பி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சம்மன் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் விசாரணை

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மற்றும் மதுரையில் நடந்த வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு முறையாக மதிப்பிடப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், அதாவது அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி எங்கு இருந்து வந்தது? எப்போது, எங்கு எல்லாம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது?

இவர்களிடம் கேட்பதற்காக கேள்விகளும் தயாரித்து வைத்து உள்ளோம். விரைவில் முறையாக சம்மன் அனுப்பி, சம்பந்தப்பட்டவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் பெற முடிவு செய்து உள்ளோம். அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு டெல்லியில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story