மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + Gold worth Rs 61 lakh seized at Chennai airport

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல்
மலேசியா, துபாய், கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.61 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர்.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அப்பாஸ் (வயது 34) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைத்திருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள 547 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த நூருல் அமீன் (48), சென்னையை சேர்ந்த சையத் முகமது (51) ஆகியோர் வந்தனர்.

இவர்களை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.26 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 634 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும், கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த உமர் பாரூக் அலி (56) என்பவரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ஆக மொத்தம் 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அப்பாசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.