டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 7:57 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு (வி.ஏ.ஓ.) ஆகிய தேர்வுகளில் அரங்கேறிய முறைகேடுகள் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புலன் விசாரணையில், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேரும், குரூப்-2ஏ தேர்வுவில் 19 பேரும், வி.ஏ.ஓ. தேர்வில் 2 பேரும் என மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட 3 போலீஸ்காரர்களும் அடங்குவார்கள்.

இந்த 3 வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தற்போது போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது வேட்டை தினமும் நடக்கிறது. எனவே ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலையில் சிக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதியை சேர்ந்த ம.சுயம்புராஜன் (வயது 29) இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.7 லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்று, ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள புன்னப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்த முறைகேடு வழக்கில் ஊத்துக்கோட்டை தாலுகா பனையஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்ராஜ் என்கிற கபிலன் (36) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை அடிப்படையில் தினமும் கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story