கட்சி பொறுப்புகளை மறந்து ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் “என்னை போலவே மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள்” - அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அறிவுரை


கட்சி பொறுப்புகளை மறந்து ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் “என்னை போலவே மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள்” - அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அறிவுரை
x
தினத்தந்தி 12 Feb 2020 12:00 AM GMT (Updated: 11 Feb 2020 11:47 PM GMT)

‘என்னை போலவே மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள்’ என்றும், ‘கட்சி பொறுப்புகளை மறந்து மக்களுடன் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள்’ என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

சென்னை, 

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று காலையில் திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை முழுமையாக பெற முடியாமல் போனதாலேயே பல இடங்களில் தோல்வி கிடைத்திருக்கிறது என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், ‘அப்படி இல்லை. கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் நமக்குத்தான் மிகுதியாக கிடைத்திருக்கிறது” என்றார்.

கூட்டத்தில் ஒரு நிர்வாகி பேசுகையில், ‘ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது பொன்.ராதாகிருஷ்ணன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. இருந்தபோதிலும் தி.மு.க.வின் ஓட்டுகளை நம் பக்கம் இழுத்ததாலேயே தேர்தலில் வெற்றி பெற முடிந்தது’ என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தின் நிறைவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “என்னதான் முதல்-அமைச்சர் என்றாலும், நான் என்றுமே ஒரு விவசாயி போலவே இருக்கிறேன். மக்களோடு மக்களாக எளிமையாகவே பழகுகிறேன். எங்காவது வெளியே செல்கையில் பொதுமக்களை கண்டால் உடனடியாக காரை நிறுத்தி அவர்களுடன் பேசுகிறேன், டீக்கடையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டீ குடித்து பேசி மகிழ்ந்து இளைப்பாறுகிறேன்.

அதுபோல நீங்களும் கட்சி பொறுப்புகளை மறந்து மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள். அதுதான் முக்கியம்” என்று குறிப்பிட்டதாக அ.தி.மு.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கூட்டத்துக்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சிலர் ‘செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என்றும் கூறி கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story