தமிழ்நாடு கனிம நிறுவன நிலத்தை விற்க கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழ்நாடு கனிம நிறுவன நிலத்தை விற்க கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2020 8:45 PM GMT (Updated: 12 Feb 2020 8:24 PM GMT)

தமிழ்நாடு கனிம நிறுவன நிலத்தை விற்க கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) அதன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் வாடகைக்கு இயங்கி வரும் ‘டாமின்’ தலைமை அலுவலகம் வாடகையை கூட முறையாக செலுத்த முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் ரூ.60 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு இந்த நிறுவனத்தின் கீழ் உள்ள குவாரிகளை இயக்க முடியவில்லை.

605 சதவீத லாபத்தில் டாமின் நிறுவனம் இயங்குவதாக அதன் நிர்வாக இயக்குநராக இருந்த வள்ளலார் 2 வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தார். ஆனால் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நிர்வாகத்தில் அவல நிலைமைக்கு இது உள்ளாகியிருக்கிறது. வடசென்னை பகுதியில் உள்ள டாமினுக்கு சொந்தமான நிலத்தை விற்று இனிமேல் சம்பளம் கொடுக்கலாமா? என்று ஆலோசித்து வருவதாக வரும் செய்திகள் அதைவிட கொடுமையாக இருக்கிறது. டாமின் நிலங்களை விற்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story