டி.என்.பி.எஸ்.சி. ஊழல் விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் நடத்த தயாரா? - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சவால்


டி.என்.பி.எஸ்.சி. ஊழல் விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் நடத்த தயாரா? - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சவால்
x
தினத்தந்தி 12 Feb 2020 9:30 PM GMT (Updated: 12 Feb 2020 9:26 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. ஊழல் விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் நடத்த தயாரா? என்று தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறினார். நெல்லையில் இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, 

அமைச்சர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யப்பன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும், அவரோடு நான் இருப்பதாகவும் ஒரு புகைப்படத்தை காட்டி, தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு நடக்கிறது. அதைத்தான் நாங்கள் களை எடுக்கிறோம் என்று சொல்லி, ஒரு தவறான தகவலை பரப்பி இருக்கிறார்.

1996-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் நான் தொடர்ந்து அரசியலில் இருக்கிறேன், 15 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன். தொடர்ந்து அரசியலில் இருப்பதாலும், எம்.எல்.ஏ.வாக இருந்ததாலும் பல ஊர்களில் பலர் என்னுடன் புகைப்படம் எடுத்து உள்ளனர். அமைச்சர் குறிப்பிட்டுள்ள அய்யப்பன் தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் கிடையாது. நான் அவரை என்னுடன் அழைத்து சென்றதும் கிடையாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் அவர் புகைப்படம் எடுத்து உள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. ஊழல் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அமைச்சர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்காக பேசக்கூடாது. டி.என்.பி.எஸ்.சி. ஊழல் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் நடத்த அனுமதிப்பார்களா? அவ்வாறு நடத்தினால் உண்மை நிலவரம் தெரியும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும்கூட வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறேன். இதுதொடர்பான வழக்கில் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் நான் கண்ணால் பார்த்ததில், 98 ஓட்டுகளை நான் அதிகமாக பெற்று உள்ளேன். இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறினார்.

Next Story