சேவை வரி செலுத்தக்கோரி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு


சேவை வரி செலுத்தக்கோரி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Feb 2020 10:00 PM GMT (Updated: 12 Feb 2020 10:04 PM GMT)

சேவை வரி செலுத்தக்கோரி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ், இந்தி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்களுக்கு ‘மெட்டு’ அமைத்துள்ளேன். ஒரு இசையமைப்பாளருக்கு தன்னுடைய படைப்பு மீது முழு காப்புரிமை உள்ளது. இந்த மெட்டுகள் எந்த திரைப்படத்துக்கு அமைக்கப்பட்டதோ, அவற்றின் உரிமை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும். தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய படைப்புகளில் காப்புரிமைகளை வழங்கியதற்காக சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி. ஆணையர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரு பாடலின் மெட்டு மீதான காப்புரிமையை தயாரிப்பாளருக்கு நிரந்தரமாக வழங்குவது என்பது சேவையல்ல. அதற்காக சேவை வரி விதிப்பது என்பது தவறு. எனவே, எனக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அனிதா சுமந்த், ‘ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாவும், இந்த வழக்குக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் 2 வாரத்துக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story