மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். குறித்த தகவலை நீக்க எதிர்ப்பு: பாடப்புத்தகங்களில் இருந்து பதிவுகளை நீக்க என்ன நடைமுறை? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி + "||" + RSS. Objection to delete information: What is the procedure for deleting records from textbooks? - High Court question to the Government

ஆர்.எஸ்.எஸ். குறித்த தகவலை நீக்க எதிர்ப்பு: பாடப்புத்தகங்களில் இருந்து பதிவுகளை நீக்க என்ன நடைமுறை? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

ஆர்.எஸ்.எஸ். குறித்த தகவலை நீக்க எதிர்ப்பு: பாடப்புத்தகங்களில் இருந்து பதிவுகளை நீக்க என்ன நடைமுறை? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பதிவுகளை நீக்க என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது? என்று ஆர்.எஸ்.எஸ். குறித்த கருத்தை புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, 

10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘சுதந்திர போராட்டத்தின்போது, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து மகா சபா போன்ற அமைப்புகள் எடுத்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது தவறான கருத்து என்றும், இதுபோன்ற நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுக்கவில்லை என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் கழகம் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை சார்பில், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பான இந்த பதிவுகள் இந்த ஆண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைக்கப்படும். அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான சுற்றறிக்கையும் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 20-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பான வரலாற்று பதிவுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் வக்கீல் எஸ்.துரைச்சாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும். அந்த வரலாற்றை தற்போது, புதிதாக திருத்தக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘பொதுவாக பள்ளி பாடப்புத்தகங்களில் பாடத்திட்டங்கள் எந்த அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது?, எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது?, அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பதிவுகளை நீக்க என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது? என்பது குறித்து கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவாக பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற மார்ச் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.