டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்த உதவிய கார் டிரைவர் கைது


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்த உதவிய கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 10:54 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக உதவிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்குகளில் நேற்று முன்தினம் வரை 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார் என்ற முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த வழக்குகளில் தினமும் கைது நடவடிக்கை தொடருகிறது. இதற்கிடையே நேற்று 41-வது குற்றவாளியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் மரியலிஜோஸ்குமார் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார்.

குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை தனியார் பார்சல் வேனில் ஏற்றி வரும்போது, வழியில் வேனில் இருந்து தங்களுக்கு வேண்டியவர்களின் விடைத்தாள்களை மட்டும் தனியே எடுத்து ஜெயக்குமாரின் காரில் ஏற்றி, பின்னர் காரில் வைத்தே விடைத்தாள்களை திருத்தி, மீண்டும் பார்சல் வேனில் திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஏற்றி, டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த முறைகேடுக்கு, டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் உறுதுணையாக இருந்துள்ளார். ஓம்காந்தனும் கைதாகி உள்ளார். விடைத்தாள்கள் ஏற்றப்பட்ட ஜெயக்குமாரின் கார் திடீரென பழுதாகி வழியில் நின்றுவிட்டதால், தான் சென்ற இன்னொரு காரில் விடைத்தாள்களை ஏற்றுவதற்கு, ஓம்காந்தன் மாற்று ஏற்பாடு செய்துள்ளார்.

ஓம்காந்தன் ஏற்பாடு செய்த மாற்று காரை, தற்போது கைதாகி உள்ள மரியலிஜோஸ்குமார் ஓட்டி வந்துள்ளார். இதற்கு, அவர் பெருந்தொகை பணமாக பெற்றுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் இவர் கைதாகி உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story