மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.147 உயர்வு: சிலிண்டர் ஒன்று ரூ.881-க்கு விற்பனை


மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.147 உயர்வு: சிலிண்டர் ஒன்று ரூ.881-க்கு விற்பனை
x
தினத்தந்தி 12 Feb 2020 11:15 PM GMT (Updated: 12 Feb 2020 10:58 PM GMT)

மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.147 உயர்ந்து சிலிண்டர் ஒன்று ரூ.881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் இதர வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை கொண்டு செல்ல சிரமமான மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் விற்பனை செய்யப்படும். அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர் களை மானியம் இல்லாமல் தான் பெற முடியும்.

சர்வதேச சந்தையில் நிகழும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருவது போன்று, மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதத்துக்கான(பிப்ரவரி) வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக ரூ.147 உயர்த்தியுள்ளன. இதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.881 ஆகும்.

அதே நேரத்தில், கடந்த ஜனவரி மாதம் ரூ.1,363-க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.226.50 அதிகரித்து ஒரு சிலிண்டர் விலை ரூ.1589.50-க்கு விற்கப்படும் என்று கடந்த 1-ந்தேதியே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story