மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது + "||" + Puducherry Assembly Resolution Against Citizenship Amendment Act: Despite Governor's Objection passed

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி, 

புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

இதையடுத்து கவர்னர் கிரண்பெடியும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பாக புதுவை சட்டசபையில் விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று காலை 9.40 மணிக்கு தொடங்கியது.

அதைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி முதல்- அமைச்சர் நாராயணசாமி தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது நாராயணசாமி பேசியதாவது:-

மத்திய அரசு மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க பார்க்கிறது. மற்ற மதத்தை சார்ந்தவர்களை நசுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம்தான் குடியுரிமை திருத்த சட்டம். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பாக நடந்து வரும் போராட்டத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தால் பாதிக்கப்படப்போவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. இலங்கை தமிழர்களும்தான். இந்த சட்டத்துக்கு எதிராக 147 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இந்திய-பிரெஞ்சு ஒப்பந்தத்துக்கு எதிரானது. இதனால் ஜனநாயகத்தை காக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரம் குறைந்துள்ளது. இந்த சட்டத்தை அ.தி.மு.க. எதிர்த்து இருந்தால் நிறைவேறி இருக்காது. ஜனநாயக துரோகத்தை அ.தி.மு.க. செய்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள். கவர்னருக்கும், சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்? காலையிலேயே கவர்னரை சந்தித்துவிட்டுத்தான் இங்கு வந்தனர். கவர்னர் மாளிகை பாரதீய ஜனதாவின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி இந்த சட்டமன்ற கூட்டத்துக்கு வந்திருக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அவர் தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும்.

இந்த சட்டம் வந்ததுமே நாங்கள் எதிர்த்தோம். இதற் காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். மக்கள் ஏற்காத சட்டங்களையும், திட்டங்களையும் தட்டிக்கேட்போம். அந்த பொறுப்பு எங்களுக்கு உள்ளது. புதுவை மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும், சட்டத்தையும் எதிர்க்க தயாராக உள்ளோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

தீர்மானத்தின் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் சிவக்கொழுந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசியபோது, அதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் பேசுவதற்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இது ஜனநாயக படுகொலை என்றும், இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி சட்டசபையில் இருந்து அவர்கள் வெளியேறினர். தொடர்ந்து சட்டசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் கிரண்பெடி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அதையும் மீறி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தற்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 6 மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி சட்டசபையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தீர்மானம் கொண்டுவந்தார்.

உத்தரகாண்ட் மாநில மேல்முறையீட்டு மனு ஒன்றில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படை உரிமையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படு்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டினை உறுதிசெய்யவும் மத்திய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உயர்பதவியில் இடஒதுக்கீடு வழங்கி மக்களின் உரிமையை பாதுகாக்கவும், சமூக நீதியை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அப்போது பேசினார்.

அதைத் தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.