நாளை தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?


நாளை தமிழக பட்ஜெட்:  முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
x
தினத்தந்தி 13 Feb 2020 9:21 AM GMT (Updated: 13 Feb 2020 9:21 AM GMT)

நாளை தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நாளைய பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நிகராக தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்ப்பிடிப்பு ஏரி உருவாக்கப்பட்டு வருவதற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story