அதிகாரிகள் குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து


அதிகாரிகள் குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 13 Feb 2020 9:00 PM GMT (Updated: 13 Feb 2020 8:51 PM GMT)

நீதிபதி, மூத்த பத்திரிகையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் கொண்ட குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் சேகராம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தாக்கல் செய்த பத்திரிகையாளர் என்பதற்கான அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும், போலீஸ் அதிகாரிக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினர். போலி பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும், அவர்களை களை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அங்கீகார அட்டை வழங்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி, மூத்த பத்திரிகையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற வேண்டும். இந்த கமிட்டி பரிந்துரைக்கும் பத்திரிகையாளர்களுக்குத்தான் அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

சென்னை பிரஸ் கிளப், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, எம்.யூ.ஜே. ஆகிய பத்திரிகையாளர் சங்கங்களை மட்டுமே தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், ‘சென்னை பிரஸ் கிளப்பின் நிர்வாகிகள் தேர்தல் நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. போலி பத்திரிகையாளர்களின் பெயர்கள் பிரஸ் கிளப் உறுப்பினர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இந்த கிளப்பை ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் கட்டுப்படுத்தி வருகிறார்’ என்று கூறினார்.

சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஆஜரான வக்கீல் என்.ரமேஷ், ‘பிரஸ் கிளப்பிற்கு 1999-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன்பின்னர் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டாலே, யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து தேர்தலை நிறுத்திவிடுகிறார். எனவே, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டுக்கு 2018-ம் ஆண்டும், எம்.யூ.ஜே.வுக்கு 2017-ம் ஆண்டும் தேர்தல் நடந்தது என நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள, ‘பத்திரிகைகள், செய்தி சேனல்கள் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இல்லாமல் உலகில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்துகொள்ள முடியாது. பெண்கள் பலர் டி.வி. சீரியல்களை பார்க்காமல், செய்தி சேனல்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர்’ என்று தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அனைவரும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை 24-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story