எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.பி.உதயகுமார் கண்டனம்


எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 10:17 PM GMT)

‘காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பேரவையின் செயலாளரும், தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

7½ கோடி மக்கள் கொண்ட தமிழகத்தை தேசத்தில் முதன்மை இடத்துக்கு உயர்த்தி நல்லாட்சி நடைபெறும் மாநிலம் என்று நாடே பாராட்டுகிற நிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கி இருக்கிறார்.

காவிரி உரிமை மீட்பு, மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியது, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, குடிமராமத்து திட்டங்கள் மூலம் நீர்மேலாண்மையில் ஒரு புதிய புரட்சி, பிளாஸ்டிக் ஒழிப்பு, ஜல்லிக் கட்டு உரிமையை பக்குவமாய் மீட்டது, அத்திக்கடவு-அவினாசி திட்டம், முல்லைப் பெரியாரின் உரிமை மீட்டு தந்திர வரலாற்று புரட்சி, கடல் கடந்து வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தது என எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள் பல.

பட்டியலிட்டு சொல்லமுடியாத அளவுக்கு தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும் நொடி பொழுதும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று நாடே இன்று வாழ்த்துகிறது.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றிக் காட்டி, அவர்களது பாராட்டுகளையும் பெற்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமலும், ஏற்றுக்கொள்ள முடியாமலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உளறி வருகிறார் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க சட்ட வல்லுனர்களை வைத்து தேவையான தனி சட்டங்களை உருவாக்கி, பெற வேண்டிய இடங்களில் அனுமதியை பெற்று எடப்பாடி பழனிசாமி சாதித்து காட்டுவார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மேலும் மு.க.ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற வாரிசு அரசியல் என்ற ஒற்றை தகுதியை மட்டும் தன் தகுதியாக வைத்துக்கொண்டு இன்றைக்கு தமிழினத்துக்கு தலைவனாக வேண்டும் என்ற பேராசை வெறியோடு, பதவி பசியோடு நாற்காலிக்காக அலைந்து திரிகின்ற நாலாந்தர மனிதனாக செயல்பட்டு வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள். நல்லதை பாராட்ட மனமில்லாமல் போனாலும் அவதூறு செய்கிற, பழிசுமத்துகிற, குற்றம் காண்கிற குணத்தை இனியாவது மு.க.ஸ்டாலின் மாற்றிக்கொண்டால், அவரை ஒரு மனிதராக மட்டுமாவது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது ஏமாற்று வேலை என்று தொடர்ந்து கோயபல்ஸ் பிரசாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை மறந்து பொதுநலத்தை துறந்து சுயநல உச்சத்துக்கு சென்றுள்ளதை அவரின் அவதூறு பிரசாரம் எடுத்துக்காட்டுகிறது. நாட்டு நலனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ, தமிழக மக்களின் வளர்ச்சிக்கான முயற்சியோ தங்களிடம் அறவே இல்லை என்பதை மட்டுமே அவரது பொய் பிரசாரம் எடுத்துக்காட்டுகிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story