இடது கையை கட்டிக்கொண்டு 20 மணி நேரம் கிரிக்கெட் பந்து வீசி கல்லூரி மாணவர் சாதனை முயற்சி - அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்


இடது கையை கட்டிக்கொண்டு 20 மணி நேரம் கிரிக்கெட் பந்து வீசி கல்லூரி மாணவர் சாதனை முயற்சி - அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:45 PM GMT (Updated: 13 Feb 2020 10:32 PM GMT)

சென்னை மாநில கல்லூரி மாணவர் செந்தில் வேல்குமார் இடது கையை கட்டிக்கொண்டு 20 மணி நேரம் கிரிக்கெட் பந்து வீசி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

சென்னை, 

சென்னை மாநில கல்லூரி மாணவர் செந்தில் வேல்குமார் தனது இடது கையை கட்டிக் கொண்டு 20 மணி நேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்து வீசி சாதனை புரியும் முயற்சியை நேற்று தொடங்கினார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை தாங்கி, மாணவனின் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் ஏ.பத்மினி, உடற்கல்வித் துறை இயக்குனர் ஏ.குயிலி, வரலாற்றுத்துறை தலைவர் செல்வ முத்துக்குமாரசாமி, உடற்கல்வி இயக்குனர் ஆர்.சிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர் செந்தில் வேல்குமார் இடதுகையை கயிற்றால் கட்டிக்கொண்டு வலது கையால் கிரிக்கெட் பந்தை வீசுகிறார். நேற்று மாலை 6.30 மணிக்கு இந்த சாதனையை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு 5 நிமிடம் இடைவெளி கொடுக்கப்படுகிறது. இந்த இடைவெளி நேரத்தையும் அவர், கடைசியில் ஈடுசெய்ய வேண்டும். இவரின் இந்த சாதனை ‘ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெற இருக்கிறது. அதனை பார்க்க அந்த நிறுவனத்தில் இருந்து அதிகாரி வந்து இருந்தார்.

செந்தில் வேல்குமார் நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்தவர் ஆவார். இவர் இதற்கு முன்பு 2018, 2019-ம் ஆண்டுகளில் முறையே 10, 15 மணி நேரம் இந்த சாதனையை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story