மின்சாரம் இல்லாத கிராமங்களில் சோலார் மின் வசதி - உலக தொண்டு நிறுவனம் ஏற்பாடு


மின்சாரம் இல்லாத கிராமங்களில் சோலார் மின் வசதி - உலக தொண்டு நிறுவனம் ஏற்பாடு
x
தினத்தந்தி 13 Feb 2020 11:00 PM GMT (Updated: 13 Feb 2020 10:46 PM GMT)

மின்சாரம் இல்லாத கிராமங்களில் சோலார் மின் வசதி தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

சென்னை, 

உலக அளவில் ‘பிரி மானசாரி’ என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தென்னிந்திய மண்டல தலைவராக வி.ஜி.மதுசூதன் பதவி ஏற்க உள்ளார். இவர் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ் உறவினர் ஆவார்.

இவர் பதவியேற்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் 15-ந்தேதி(நாளை) நடக்கிறது. தற்போது தென் மண்டல தலைவராக இருக்கும் ஆபிரகாம் மார்க்கோஸ் தனது பொறுப்புகளை வி.ஜி.மதுசுதனிடம் ஒப்படைக்கிறார்.

இந்தநிலையில் புதிய தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள வி.ஜி.மதுசுதன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1717-ம் ஆண்டு 18-ம் நூற்றாண்டில் ‘முதல் கிராண்டு லாட்ஜ்’ என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 300 ஆண்டுகள் பழமையான இந்த தொண்டு நிறுவனம் ‘கிராண்ட் லாட்ஜ்’ என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்த அமைப்பில் முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சுவாமி விவேகனாந்தர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம், கேரளா, கோவா மற்றும் புதுச்சேரியில் 178 கிளைகள் உள்ளன. சாதி, மத பேதத்துக்கு அப்பாற்பட்டது இந்த அமைப்பு. இறை நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்க முடியும். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அந்த நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருக்க முடியும்.

இந்த அமைப்பு மூலம் இலவச மருத்துவ அறுவை சிகிச்சைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், முதியோர் இல்லங்களை நடத்தி வருகிறோம். மறைமுகமாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறோம். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஈஞ்சம்பாக்கத்தில் இலவச நீரிழிவு சிகிச்சைக்காக ரூ.1.2 கோடியில் 12 கருவிகள் கொண்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விரைவில் இதனை திறந்து வைக்க உள்ளார்.

‘ஜோதீர்கமய்யா’ என்ற திட்டத்தின் கீழ் மின்சார வசதி இல்லாத குக்கிராமங்கள் தேடி கண்டுபிடித்து சோலார் மின் வசதியை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்த அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சூர்ய நாராயண ராவ், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story