20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்கத்தான் ஆர்வம் காட்டுகின்றனர் - அரசியல் கட்சியினருக்கு ஐகோர்ட்டு கண்டனம்


20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்கத்தான் ஆர்வம் காட்டுகின்றனர் - அரசியல் கட்சியினருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 13 Feb 2020 11:30 PM GMT (Updated: 13 Feb 2020 11:11 PM GMT)

சொத்து வரியை கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தாமல், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை பிடிக்கத்தான் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அதிக வரியும், வணிக ரீதியில் செயல்படும் வணிக கட்டிடங்களுக்கு குறைந்த வரியும் வசூலிப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள் உயர்த்த வேண்டும். ஆனால் சென்னை மாநகராட்சியில் 1998-ம் ஆண்டுக்கு பின்னர் சொத்து வரியை உயர்த்தவில்லை. இதைபோல மாநிலத்தில் உள்ள பிற உள்ளாட்சி அமைப்புகளும் சொத்து வரியை உயர்த்தவில்லை.

இதுகுறித்து ஒரு வழக்கில் இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி கடந்த 2018-ம் ஆண்டு சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியது. பின்னர் அந்த சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. எனவே, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘தமிழக அரசு பணியாக அதிகாரிகள் டெல்லிக்கு அவசரமாக செல்வதால் அவர்களால் ஆஜராக முடியவில்லை. அவர்கள் ஆஜராக கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘சொத்து வரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கி கொண்டிருந்ததா? இந்த 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும். மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளை பிடிப்பதற்காக மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ‘தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே சொத்து வரியை உயர்த்தவில்லை. குறிப்பாக சென்னையில் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. பிற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகமாக சொத்து வரி செலுத்துகின்றனர். சொத்து வரியை உயர்த்தாததால் தான், வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று நீதிபதிகள் கூறினர்.

பின்னர், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் வருகிற 18-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story