டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு: விடைத்தாள் தயாரித்த தமிழ் ஆசிரியர் கோர்ட்டில் சரண், மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு: விடைத்தாள் தயாரித்த தமிழ் ஆசிரியர் கோர்ட்டில் சரண், மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 9:00 PM GMT (Updated: 14 Feb 2020 8:28 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் விடைத்தாள் தயாரித்து கொடுத்த தமிழ் ஆசிரியர் சென்னை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4, குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக நேற்று முன் தினம் வரை 48 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்தநிலையில் கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேடாக வெற்றிபெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை தாலுகா அத்தியூர் கிராம நிர்வாக அதிகாரி அமல்ராஜ்(வயது 35) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்மூலம் கைது எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் கேள்வித்தாள்களுக்கான விடைத்தாள்களை இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு, செல்வேந்திரன்(45) என்பவர் தயாரித்து கொடுத்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர். அங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார். இவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இவர் நேற்று மாலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தார். இவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இடைத்தரகர் ஜெயக்குமாரின் இன்னொரு கார் டிரைவரான சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகர்(25) என்பவரும் நேற்று மாலை சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். இவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செல்வேந்திரனையும், பிரபாகரனையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் சரணடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது.

Next Story