மாநில செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி; கல்வீச்சில் இணை கமிஷனர் காயம் + "||" + Police clash in Muslim protest in Washermenpet, Chennai Co-commissioner injured in stone throw

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி; கல்வீச்சில் இணை கமிஷனர் காயம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி; கல்வீச்சில் இணை கமிஷனர் காயம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். பதிலுக்கு அவர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இணை கமிஷனர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.
பெரம்பூர், 

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆனால் அதன்பிறகும் அங்கு முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். போராட்டம் வலுத்ததால் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. சம்பவ இடத்துக்கு வடக்கு மண்டல இணை கமிஷனர் கபில்சிபில்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பதிலுக்கு போலீசார் மீது கல்வீசி தாக்கினர். மேலும் பிளேடாலும் அறுத்தனர். இதில் இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போராட்டக்காரர்களுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அங்கு போராட்டம் தொடர்ந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நேற்று இரவு ஆலந்தூர் ஆசர்கானாவில் ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மீனம்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்ததால் சாலை மறியலை கைவிட்டு சாலையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்குன்றம் சுற்று வட்டார ஜமாஅத் சார்பாக ஏராளமான முஸ்லிம்கள் செங்குன்றம் சாமியார்மடம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் பஜாரிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருச்சி, கோவை, செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை
சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
2. சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி: பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3. சென்னையில் சாரல் மழை பெய்தது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா?: கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் - ஐதராபாத்தில் இன்று நடக்கிறது
ஐதராபாத்தில் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் இன்று நடக்கிறது.
5. சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற இந்து ஆன்மிக கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர் என்று நிறைவு நாளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.