குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்... போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்... போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Feb 2020 7:21 AM GMT (Updated: 15 Feb 2020 7:21 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் தொடருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தர்ணா, சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

சென்னை

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள்  சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.   

நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதில் ஒரு சிலரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் ஏராளமானோர் கூடினர். இத்னால் ஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன.

தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவித்தார்.

போலீஸ் கமிஷனர் வேண்டுகோளை ஏற்க மறுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை பலரும் தொடர்ந்தனர்.இதனிடையே வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, சென்னை  போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு  நடைப்பெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து முதலமைச்சரிடம்  போலீஸ் கமிஷனர்  விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன், பிற்பகலில் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் நேற்று போராட்டக்கார்களால் காயமடைந்தாக கூறி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து ஏ.கே.விஸ்வநாதன் நலம் விசாரித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்த சூழலில் அனைவரும் அமைதி காப்பது அவசியம். சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளையும், மோதலை தூண்டும் கருத்துகளையும் பகிர வேண்டாம். தமிழகம் சட்டம்-ஒழுங்கை கடைபிடிக்கும் அமைதியான மாநிலம், அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும். சென்னையில் எந்த போராட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

Next Story