சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம்...!


சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம்...!
x
தினத்தந்தி 15 Feb 2020 10:03 AM GMT (Updated: 15 Feb 2020 10:03 AM GMT)

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள்  சார்பில் நேற்று போராட்டம் நடத்தின.

நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதில் ஒரு சிலரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் ஏராளமானோர் கூடினர். இதனால் ஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த நிலையில் போலீசார்  தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன.

தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவித்தார்.

போலீஸ் கமிஷனர் வேண்டுகோளை ஏற்க மறுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை பலரும் தொடர்ந்தனர்.இதனிடையே வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.

*  வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து நாகை காவல் நிலையம் முன்பு 1000-திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

* திருவிடைமருதூர் அருகே 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

* நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

* சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 160 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

* தடியடையை கண்டித்து நீலகிரி குன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
தஞ்சை

* தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஏராளமானோர் ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதற்கு போலீஸ் அனுமதி இல்லாததால் அங்குள்ள பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச்சாலையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தலைமை தபால்நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* திருச்சியில் கண்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை, மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் நூற்றுக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாநகர காவல்ஆணையர் வரதராஜூ வந்து அவர்களுடன் பேச்சு நடத்தியதை தொடந்து கலைந்து சென்றனர்.தொடர்ந்து பாலக்கரை ரவுண்டானா அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 700-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈட்டுபட்டு வருகின்றனர். 

* நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த வந்த இஸ்லாமிய அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

* கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இஸ்லாமியர்கள் கண்டன கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.

* ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.  ராமநாதபுரம் கமுதியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* தூத்துக்குடியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

* திருச்செந்தூரை அடுத்த காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

Next Story