போராட்டக்காரர்கள் மீது தடியடி ஏன்? எடப்பாடி பழனிசாமியை சந்தித்து போலீஸ் கமிஷனர் விளக்கம்


போராட்டக்காரர்கள் மீது தடியடி ஏன்?   எடப்பாடி பழனிசாமியை சந்தித்து போலீஸ் கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2020 11:15 PM GMT (Updated: 15 Feb 2020 10:35 PM GMT)

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஏன்? என்பது குறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.

சென்னை, 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் போலீசார் சிலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். இதில், போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தடியடி சம்பவத்தில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியதால் போராட்டம் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக்கோரி, இரவு சாலை மறியல் நடைபெற்றது. தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை நிலவியதால், போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

இந்த நிலையில், போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசார் நடத்திய தடியடிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற முஸ்லிம்கள் போராட்டம் குறித்தும், தடியடி நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

தவறான கருத்துகள் வேண்டாம்

அதன்பின்னர், கல்வீச்சு தாக்குதலில் காயம் அடைந்த மேற்கு மண்டல இணை கமிஷனர் பி.விஜயகுமாரி சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் (சட்டம்- ஒழுங்கு) ராஜ்குமார், ஆயுதப்படை பெண் காவலர்கள் கலா, உதயகுமாரி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களது உடல்நிலை குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தார்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

இந்த சூழலில் அனைவரும் அமைதி காப்பது அவசியம். சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளையும், மோதலை தூண்டும் கருத்துகளையும் யாரும் தெரிவிக்க வேண்டாம். தமிழகம் சட்டம்-ஒழுங்கை கடைபிடிக்கும் அமைதியான மாநிலம். அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும். சென்னையில் எந்தப் போராட்டம் நடத்தவும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story