நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 16 Feb 2020 11:15 PM GMT (Updated: 16 Feb 2020 10:53 PM GMT)

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 4 நாட்களாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவுபெற்றது.

சென்னை, 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்றும், கட்சி வளர்ச்சிப்பணி களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அ.தி.மு.க. தலைமை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது.

கடந்த 10-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் 12, 13-ந் தேதி கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 3-வது நாளாக அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி. மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், அவர் முதல்-அமைச்சர் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்று 4-வது ஆண்டு தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் நேரடியாக குறைகளை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கூட்டத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையின்போது, தற்போது களத்தில் தீவிரமாக பணியாற்றினால்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றும், மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் வீடு கோவையில் உள்ளதால் அவரால் தீவிரமாக களப்பணியாற்ற முடியவில்லை. எனவே அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், மாலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையின்போது, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பெறமுடியாமல் போனதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதாகவும், மாவட்ட நிர்வாகிகள் காரசாரமாக கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் தெரிகிறது.

இறுதியில், மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மாநகர உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

Next Story