சட்டசபையை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த தடை கேட்டு வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


சட்டசபையை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த தடை கேட்டு வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 17 Feb 2020 9:15 PM GMT (Updated: 17 Feb 2020 8:55 PM GMT)

தமிழக சட்டசபையை வருகிற 19-ந்தேதி முஸ்லிம் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த தகவல் வெளியில் பரவியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் குதித்தனர். வருகிற 19-ந்தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான வாராகி வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் போராட்டத்தின்போது திடீரென சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மனஉளைச்சலும் ஏற்படுகிறது. இந்தநிலையில், தமிழக சட்டசபையை வருகிற 19-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தை போலீசார் அனுமதித்தால், அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு மனுதாரர் வக்கீல் முறையிட்டார். ஆனால் நீதிபதிகள், வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர். ஆனால், வழக்கு தாக்கல் செய்தால், முறைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினர். அதனால், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story