நெல்லையில் இருந்து சென்னை வந்து கைவரிசை ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயர் கைது


நெல்லையில் இருந்து சென்னை வந்து கைவரிசை ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2020 9:15 PM GMT (Updated: 18 Feb 2020 7:14 PM GMT)

நெல்லையில் இருந்து சென்னை வந்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கார், 6 புல்லட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, 

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கபிலன். இவர் தனது புல்லட் வாகனம் திருட்டு போய்விட்டதாக கடந்த மாதம் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கபிலன் செல்போன் எண்ணிற்கு போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கடந்த வாரம் நெல்லை போக்குவரத்து போலீசாரிடம் இருந்து குறுந்தகவல் வந்தது.

அதிர்ச்சி அடைந்த கபிலன் இதுகுறித்து சூளைமேடு போலீசாரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், கபிலன் புல்லட் வாகனத்தை நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த கொம்பையா(வயது27) என்பவர் ஓட்டி வருவது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நெல்லை சென்று கொம்பையாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புல்லட் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

கொம்பையா என்ஜினீயரிங் படித்துவிட்டு சொகுசு வாழ்க்கைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவருக்கு உடந்தையாக உறவினர்கள் அருணாச்சலம், வினோத், தில்லை நடராஜன், வானமாமலை ஆகியோர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

சென்னையில் பல்வேறு இடங்களில் 6 கார்கள், 6 புல்லட் வாகனங்கள் திருடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து திருட்டு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story