அ.தி.மு.க. அரசால் மக்களுக்கு பயன் இல்லை - கே.எஸ்.அழகிரி அறிக்கை


அ.தி.மு.க. அரசால் மக்களுக்கு பயன் இல்லை - கே.எஸ்.அழகிரி அறிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2020 9:30 PM GMT (Updated: 18 Feb 2020 7:48 PM GMT)

அ.தி.மு.க. அரசால் மக்களுக்கு பயன் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கடந்த 3 ஆண்டு காலத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிறபோது, பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நுழைய விட மாட்டோம் என்று சொன்னவர்கள், மத்திய பா.ஜ.க. அரசின் ‘நீட்’ தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக்கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியாமல் வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தணிப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். எனவே எடப்பாடி அரசின் 3 ஆண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்லவேண்டும். எனவே தமிழக மக்கள் மிகுந்த வேதனையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

எப்போது அடுத்த பொதுத்தேர்தல் வரும், அப்போது எப்படி அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரிகிற வகையில் வாக்குகளை அளிக்கலாம் என மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்கு காரணம் பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு விளங்கி வருகிறது. சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story