ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவோம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு


ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவோம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 10:15 PM GMT (Updated: 18 Feb 2020 9:23 PM GMT)

மாவட்ட ரீதியான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்த்திருத்தங்களையும் ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் பேரன்பை பெற்ற ஒப்பற்ற அரசியல் இயக்கமாகிய அ.தி.மு.க. அரசியல் களத்திலும், தேர்தல் பணிகளிலும் ஆற்றவேண்டிய கடமைகளை பற்றியும், மக்களுக்கு இன்னும் எவ்வாறெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து, கலந்துரையாடி நம் கடமைகளை திட்டமிட தலைமைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கும் ஆலோசனை கூட்டங்கள் மிக சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்திருந்தன.

இந்த ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் சென்றதை கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் பயின்ற நாம் அனைவரும் கட்சியின் உயர்வுக்காகவும், வெற்றிக்காகவும் முழு மூச்சுடன் பணியாற்ற உறுதிபூண்டிருப்பதை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரிடமும் காணமுடிந்தது.

கட்சியின் அழைப்பை ஏற்று, மாவட்ட ரீதியான ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்ட கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் பணிகள் குறித்தும், கட்சியின் அரசின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினீர்கள்.

கட்சி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிவித்துள்ள கருத்துகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான வகையில் கட்சியை வழிநடத்தி செல்வோம் என்று உறுதி கூறுகிறோம். ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளில் சிலர் சுட்டிக்காட்டியவாறு ஆங்காங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் பணியாற்றிய ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதேபோல கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து, அவர்கள் இனிப்பும் வழங்குகிறார்கள்.

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story