நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கு பாதிப்பு? - தி.மு.க. உறுப்பினருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கு பாதிப்பு? - தி.மு.க. உறுப்பினருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2020 11:15 PM GMT (Updated: 18 Feb 2020 10:58 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்றும், நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் மனோ தங்கராஜ்:- தமிழக அரசின் மொத்த வருவாய் வரவில் 13 சதவீதம் மட்டுமே மூலதன செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி ரூ.30,028 கோடி பாக்கி உள்ளது. உங்களுடைய தாரக மந்திரத்தில் ஒன்று அமைதி. எனவேதான் மத்திய அரசு என்ன செய்தாலும் அமைதியாகவே இருக்கிறீர்கள்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதுவும் சொல்லாமல், அமைதியாக இருப்பதாக உறுப்பினர் இங்கே சொல்கிறார். காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருந்தபோது, முதல்- அமைச்சர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீங்கள் 16½ ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தீர்கள். அப்போது, மத்திய அரசிடம் எதைக் கேட்டு பெற்றிருக்கிறீர்கள். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தீர்களா? கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது, நீங்கள்தான் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள். அதை தடுத்தீர்களா? மக்கள் விரோத நடவடிக்கைகளை, ஜீவாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எடுத்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

தி.மு.க. கொறடா சக்கரபாணி:- அமைச்சர் இங்கே தவறான தகவலை தருகிறார். கல்வி மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தது. தற்போது நீட் தேர்வு கட்டாயமாகி இருக்கிறது. அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களுக்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நீங்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உங்கள் (தி.மு.க.) உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இதுபற்றி எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை? அங்கு குரல் கொடுத்தால் நிறைவேறும்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- நீட் தேர்வு அறிவிப்பு வரும்போது மத்திய அரசில் அங்கம் வகித்தது நீங்கள் (தி.மு.க.) தான். 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இன்று தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிறீர்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவே கூறியிருக்கிறார். அது ‘வாட்ஸ்அப்’பில் எல்லாம் வந்தது. அனைவருக்கும் தெரியும்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோதுதான் விவசாயத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டது. அப்போது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.

சக்கரபாணி:- சுமார் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தி.மு.க. ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கே.ஏ.செங்கோட்டையன்:- உரம் விலை ஏறியதற்கு யார் காரணம்? மூட்டைக்கு ரூ.200 உயர்ந்து இருக்கிறதே.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- மத்திய அரசில் 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்தவர்கள் நீங்கள். ஒருவர் உடல்நலம் இல்லாததால் இலாகா இல்லாத மந்திரியாகவே இருந்தார். நாங்கள் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றதில்லை. ஆனால், நீங்கள் பதவியில் தான் குறியாக இருந்தீர்கள்.

மனோ தங்கராஜ்:- எங்கள் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். நீங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தைக்கூட எதிர்க்கவில்லை. நீங்கள் மத்திய அரசை பகைக்க விரும்பவில்லை.

(இந்த இடத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஆவேசமாக பேசினார்)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் இதையே சொல்லிச் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த சட்டத்தால் எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?. ஒருவராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?. இந்த அரசு என்றைக்குமே சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கும். இன்றைக்கு இரட்டை குடியுரிமை அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருப்பதாக சொல்லி வெளிநடப்பு செய்தீர்கள். அப்படி பார்த்தால், குடியுரிமை திருத்த சட்ட விவகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது.

மனோ தங்கராஜ்:- டாஸ்மாக் மது வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், கடன் அளவு இருமடங்கையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைத்துள்ளது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்த ஆண்டும் நிதி வருவாய் பற்றாக்குறை 3 சதவீதத்திற்கும் மேல் செல்லவில்லை. கடன் அளவும் 25 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது.

மனோ தங்கராஜ்:- தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் (அ.தி.மு.க.) மதுவை படிப்படியாக ஒழிப்போம் என்று சொன்னீர்கள். ஆனால், மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இப்போது மது விலையையும் உயர்த்தி இருக்கிறீர்கள். இதனால், மேலும் வருமானம் அதிகரிக்கும். மது வருமானத்தை நம்பியே அரசு உள்ளது.

அமைச்சர் பி.தங்கமணி:- தமிழகத்தில் 2016-ம் ஆண்டு 6,215 மதுக்கடைகள் இருந்தன. அதன்பிறகு இருமுறை தலா 500 கடைகள் மூடப்பட்டன. தற்போது, 5,262 மதுக்கடைதான் தமிழகத்தில் உள்ளது. மதுபான விலை உயர்வால் வருமானம் அதிகரித்து இருக்கிறது. அன்றைக்கு ஒரு குவாட்டர் விலை என்ன?. இன்றைக்கு என்ன விலை விற்கிறது? எங்களது கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான்.

மனோ தங்கராஜ்:- துணை முதல்-அமைச்சர் இங்கே பட்ஜெட் வாசிக்கிறார். ஆனால், அதன்பிறகு முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதுவே தனி பட்ஜெட் போல் இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்:- முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் அறிவிப்புகளும் பட்ஜெட்டுக்குள்தான் வருகிறது.

மனோ தங்கராஜ்:- அதை ஏன் பட்ஜெட்டிலேயே அறிவிக்கக்கூடாது.

ஓ.பன்னீர்செல்வம்:- சுனாமி வருவதை முன்கூட்டியே சொல்ல முடியாது. அதுபோலத்தான் இதுவும்.

கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டு பிளஸ்-2 பாடத்திட்டத்தை படித்தாலே போதும் நீட் தேர்வுக்கு 80 சதவீதம் இதில் இருந்தே கேட்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story