சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன


சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 11:15 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் நேற்று 5-வது நாளாக நடைபெற்றது. போராட்டம் நடக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பெரம்பூர், 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் ஒருகட்டத்தில் சாலைமறியலாக மாறியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் 14-ந்தேதி இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது.

5-வது நாளான நேற்று போராட்ட மேடையில் ஜெயலலிதாபோல வேடமணிந்து வந்த ஒரு சிறுமி, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று பேசத் தொடங்கினார். ‘நான்தான் ஜெயலலிதாவின் மனசாட்சி. நான் உயிரோடு இருந்திருந்தால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்திருப்பேன். மக்களுக்கு விரோதமாக எதையும் செய்திருக்க மாட்டேன்’ என்று பேசினார். அதனைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் பாவலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோர் நேற்று போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர். இதுதவிர நிதி திரட்டியும் தங்களது தேவைகளை சமாளிக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக போலீசார் சார்பில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கண்காணிக்க இருக்கிறார்கள். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டக்குழுவினர் பார்த்துக்கொள்கிறார்கள்.

Next Story