குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆண்கள் முன்வர வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்


குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆண்கள் முன்வர வேண்டும்:  அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:54 AM GMT (Updated: 19 Feb 2020 10:54 AM GMT)

தமிழக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேசும்பொழுது குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆண்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் 3வது நாளான இன்று, வேடசந்தூர் உறுப்பினர் பரமசிவம், பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

அதனால் ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள ஏதுவாக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் எதுவும் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள என தனியாக துறை அமைக்கப்பட்டு உள்ளது.  ஆண்டொன்றுக்கு 2 லட்சம் பெண்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு 80 ஆண்களும், கடந்த 2019ம் ஆண்டு 800 ஆண்களும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டு இருக்கின்றனர்.

விருப்பமுள்ள, தகுதி உள்ள ஆண்கள் யார் வந்தாலும், கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என கூறினார்.  இந்த சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Next Story