பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: “விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், நல்ல செய்தி வரும்” - மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: “விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், நல்ல செய்தி வரும்” - மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 19 Feb 2020 9:45 PM GMT (Updated: 19 Feb 2020 9:27 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி வரும்’ என்று தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கடந்த 9-ந்தேதி அறிவித்திருந்தார். அப்போது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்தால்தான் பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சாலச் சிறந்ததாக அமைந்திட முடியும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அப்படிக் கேள்வி எழுப்பிய நேரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஆகவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து, இனிமேல் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையில், ஒரு சட்ட மசோதாவை இதுவரை ஏன் கொண்டு வராமல் இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான மசோதாவை தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஏன் என்றால் சட்டமன்ற இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) தான் நடைபெற உள்ளது. அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நிச்சயமாக, உறுதியாக தி.மு.க. அதற்கு முழு அளவு ஆதரவு தர தயாராக இருக்கிறது.

அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் எங்களுடைய உறுப்பினர்கள் நிச்சயமாக இதுகுறித்து வலியுறுத்தி, வற்புறுத்தி, உறுதியாகப் பேசுவார்கள். எனவே அந்த வகையில் இந்தப் பிரச்சினையை நான் முதல்-அமைச்சரின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதை ஏற்று, அண்மையில் தலைவாசல் கூட்ரோடு அருகில் நடந்த புதிய கால்நடை பூங்கா தொடக்க விழா நிகழ்ச்சியில், நான் பேசும்போது, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மு.க.ஸ்டாலின்:- நான் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். எனவே ஒரு நல்ல முடிவு வரும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். இதனை நாங்கள் மட்டும் அல்ல, டெல்டா பகுதி விவசாய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதுகுறித்து முதல்-அமைச்சர் இதே அவையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று வீராவேசமாக, உணர்ச்சியோடு சொன்னார். அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனே, இதற்குண்டான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டது. சரியான முறையிலே சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்துதான் இதை கொண்டு வர முடியும். ஏன் என்றால் இதில் பல பிரச்சினைகள் இருக்கிறது.

நீங்கள் ஏற்கனவே பல செய்திகளை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அதை எல்லாம் விவரமாக சட்ட வல்லுனர்களுடன் விவாதிக்கப்பட்டு, நீங்கள் சொல்லியபடியே சட்டமன்றத்தின் மூலமாக இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட நாங்கள் முயற்சி எடுக்கின்றோம். நிச்சயமாக நீங்கள் நினைக்கின்றபடி அனைத்தும் செயல்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story