மாநில செய்திகள்

சென்னை சேப்பாக்கம் ஸ்தம்பித்தது ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் போராட்டம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடாமல் அமைதியாக கலைந்தனர் + "||" + Muslims protest in defiance of High Court: They quietly dispersed without blocking the headquarters

சென்னை சேப்பாக்கம் ஸ்தம்பித்தது ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் போராட்டம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடாமல் அமைதியாக கலைந்தனர்

சென்னை சேப்பாக்கம் ஸ்தம்பித்தது ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் போராட்டம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடாமல் அமைதியாக கலைந்தனர்
ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தால் சென்னை சேப்பாக்கம் நேற்று ஸ்தம்பித்தது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்லாமல் அமைதியாக கலைந்து சென்றனர்.
சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்காக அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நேற்று முன்தினம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். சென்னை நகரில் கடந்த 13-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களுடைய கோரிக்கையை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிராகரித்தார்.

இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி சென்னை ஐகோர்ட்டில் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இஸ்லாமியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

எனினும் திட்டமிட்டபடி தடையை மீறி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்தனர். அதன்படி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் முன்பு நேற்று காலை 9 மணி முதல் இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும், முஸ்லிம் மக்களும் திரள தொடங்கினர்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கார், வேன், ஆட்டோ, ரெயில், பஸ்கள் மூலம் திரண்டு வந்தனர். இதனால் வாலாஜா சாலை முழுவதும் முஸ்லிம்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். ஏராளமானோர் தேசிய கொடியை ஏந்தியும், முகம் மற்றும் கைகளில் மூவர்ண கொடியின் நிறத்தை வரைந்தபடியும் கலந்துகொண்டனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

பேரணியை முன்னெடுத்து செல்வதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனம் மேடை போன்று மாற்றப்பட்டது.

அந்த மேடையில், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு தலைவர் காஜா மைதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், உலமா ஜமாஅத் செயலாளர் அனூர் பாஷா, தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்பட 26 இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் நின்று கூட்டத்தை கட்டுப்படுத்தி வழி நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றிற்கு எதிராக பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஆவேசமாக குரல் எழுப்பினர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேடையில் பேசிய இஸ்லாமிய இயக்க தலைவர்கள், அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடல் முடிந்ததும் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு நடத்திய போராட்டத்தால் சென்னை சேப்பாக்கம் பகுதியே நேற்று ஸ்தம்பித்தது.

முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர், 3 இணை கமிஷனர்கள், 10 துணை கமிஷனர்கள், 28 உதவி கமிஷனர்கள், 80 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

20 சி.சி.டி.வி. கேமராக்கள், 5 டிரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை போலீசார் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணித்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதாக சேப்பாக்கம் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆங்காங்கே இரும்பு தடுப்பு முள்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக ஆங்காங்கே மாநகர பஸ்களும், போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு- ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் போராட்டம் அமைதியான முறையில் முடிவடைந்தது.