டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: சரண் அடைந்த 4 பேருக்கு போலீஸ் காவல் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: சரண் அடைந்த 4 பேருக்கு போலீஸ் காவல் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 20 Feb 2020 10:58 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் சரண் அடைந்த 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு எழும்பூர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முறைகேடு வழக்கில் 46 பேரை சி.பி.சி. ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை கொளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தமிழ் ஆசிரியர் செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டிலும், கொளத்தூரை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன் எழும்பூர் கோர்ட்டிலும் கடந்த 14-ந்தேதி சரண் அடைந்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் 4 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. கோர்ட்டில், போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதில் அவர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

குரூப்-2 ஏ முறைகேடு வழக்கு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தனுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story