ஜூன் 10-ந் தேதி முதல் சென்டிரல்-மதுரை எக்ஸ்பிரஸ் வாரம் 3 முறை இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ஜூன் 10-ந் தேதி முதல் சென்டிரல்-மதுரை எக்ஸ்பிரஸ் வாரம் 3 முறை இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 8:30 PM GMT (Updated: 21 Feb 2020 6:56 PM GMT)

ஜூன் 10-ந் தேதி முதல் சென்டிரல்-மதுரை எக்ஸ்பிரஸ் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஒருமுறை முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வாரம் இருமுறை டொரோண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் டொரோண்டோ ரெயில் ரத்து செய்யப்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் 3 முறை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர்.சென்டிரல்- மதுரை-எம்.ஜி.ஆர்.சென்டிரல் (வண்டி எண்: 20601/20602) இடையே இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில், ஜூன் 10-ந் தேதி முதல் வாரத்தில் 3 முறை இயக்கப்படும். சென்டிரலில் இருந்து(திங்கட்கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை) 10-ந் தேதி முதல் இரவு 10.30 மணிக்கும், மதுரையில் இருந்து(செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஜூன் 11-ந் தேதி முதல் இரவு 10.45 மணிக்கும் இயக்கப்படும்.

மேலும் சென்டிரல்- மதுரை -சென்டிரல் (22205/22206) இடையே வாரத்துக்கு 2 முறை இயக்கப்பட்டு வந்த டொரோண்டோ எக்ஸ்பிரஸ் ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 8-ந் தேதி சென்டிரலில் இருந்து மதுரைக்கும், 9-ந் தேதி மதுரையில் இருந்து சென்டிரலுக்கும் இயக்கப்படுவதே டொரோண்டோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பயணமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story