‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்ச் 23-ந் தேதி மறியல் போராட்டம் - கி.வீரமணி பேட்டி


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்ச் 23-ந் தேதி மறியல் போராட்டம் -  கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 9:38 PM GMT)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்ச் 23-ந் தேதி மறியல் போராட்டம் நடத்துவோம் என கி.வீரமணி தெரிவித்தார்.

திருச்சி, 

திருச்சி புத்தூர் பெரியார்-மணியம்மை நூற்றாண்டு விழா அரங்கில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மகளிர் அணி உள்ளிட்ட மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு பிரச்சினையால் 9 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அடுத்து நெக்ஸ்ட் தேர்வு என வாழ்நாள் முழுவதும் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகி உள்ளது. தமிழக அரசும் இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை மீண்டும் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ந் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை தி.க. நடத்திய போராட்டங்களில் பொது சொத்துகள் நாசமாக்கப்பட்டதில்லை. அரசு அனுமதி மறுக்கப்பட்டாலும், அதை மீறி இந்த போராட்டம் நடத்தப்படும்.

இடஒதுக்கீடுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையை குலைக்கும் அளவுக்கு இடஒதுக்கீட்டில் உயர் சாதியினருக்கு, ஏழைகளுக்கு 10 சதவீதம் என்று உள்ளே நுழைத்து மற்றவர்களுக்கு விதித்த வயது விதிவிலக்கைக்கூட குறைத்து விட்டனர். எனவே, இடஒதுக்கீட்டில் உரிமையை பாதிக்கக்கூடிய சூழல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவாகி இருக்கிறது. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.

சென்னை மாநகர பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து சென்னையில் 25-ந் தேதி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story