இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2020 11:00 PM GMT (Updated: 21 Feb 2020 10:54 PM GMT)

இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கிரீமிலேயரை காட்டி பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், இந்த திட்டம் கூடுதல் சமூக அநீதியை இழைக்கும். வருமானவரி கணக்கிடுவது போன்று கிரீமிலேயர் வருவாய் வரம்பு கணக்கிடுவது ஆபத்தானது.

வல்லுனர் குழு பரிந்துரையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.67,000 ஆக இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும். இதைவிட மோசமான சமூக அநீதி எதுவும் இருக்க முடியாது.

கிரீமிலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை ஏற்காத மத்திய சமூகநீதி அமைச்சகம், இட ஒதுக்கீட்டை தடுக்கும் வகையிலான பரிந்துரையை மட்டும் ஏற்பது நியாயமல்ல.

எனவே, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலை நிறுத்த, ஊதியத்தை கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. கிரீமிலேயர் வரம்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.11 லட்சமாக உயர்த்த வேண்டும் என வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் அதை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு கிரீமிலேயர் எந்த அளவுக்கு தடையாக உள்ளது என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story