மாநில செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் + "||" + 2 thousand rupee note circulation? - Explanation of RBI officials

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? என்பதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை, 

மத்திய அரசு 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக 2 ஆயிரம், 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதற்கு சில்லரை கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் மார்ச் 1-ந்தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ள ‘டிரே’ நிரப்பப்படாது என்று தகவல்கள் பரவி வருகிறது.

ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என எடுத்தால் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது. இதனை சில்லரையாக மாற்ற மக்கள் வங்கிக்கு வருகிறார்கள். இதனால் ஏ.டி.எம். கொண்டுவந்ததன் நோக்கமே சிதைகிறது. இதனால்தான் ஏ.டி.எம்.மில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் உறுதி செய்யாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பி.டி.கிருஷ்ணன் கூறியதாவது:-

ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வந்தது. ஆனால் அந்த நோட்டை மாற்றுவது என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் ரூ.2,000 நோட்டுகளில் பெரிய வீழ்ச்சி
வருமான வரி சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.