காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 Feb 2020 11:23 PM GMT (Updated: 22 Feb 2020 11:23 PM GMT)

காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? என்பதை பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் தேர்வு வாரிய தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் வி.ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வி.வெடியப்பன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். இந்த நிலையில், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம், 1,884 அரசு டாக்டர் பணியிடத்தை நிரப்ப கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 100 மதிப்பெண்ணுக்கு நடந்தப்படும் இந்த தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 30 என்றும், பிற பிரிவினர்களுக்கு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வில் நாங்கள் அனைவரும் 48 முதல் 53 மதிப்பெண் வரை பெற்றுள்ளோம். எனவே, எதிர்கால கனவுடன் பணி நியமன உத்தரவு வரும் என்று காத்திருந்தோம்.

இந்த நிலையில், சிலருக்கு மட்டுமே பணி நியமன உத்தரவை அரசு வழங்கியது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் காலிப்பணியிட விவரங்களை எடுத்துக் கூறி, அதில் அவர்கள் விருப்பம் உள்ள ஊர்களை தேர்வு செய்த பின்னர், பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டன. ஆனால், நடப்பு ஆண்டில், இதுபோல கவுன்சிலிங் நடத்தாமல், நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்துவிட்டு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

1,884 பணியிடங்களில் வெறும் 856 பணியிடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, 1,028 பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளனர். இதற்கிடையில், அரசு டாக்டர் பணிக்கு வருகிற மே மாதம் புதிய அறிவிப்பு வெளியிட்டு, ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று இணையதளத்தில் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணி வழங்காமல், புதிய தேர்வை நடத்துவது சட்டவிரோதமாகும். எனவே, அரசு டாக்டர் பணிக்கு தேர்வு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்களையும், அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் வெளியிட்டு, அதன்படி கவுன்சிலிங் நடத்தி பணி நியமனத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய தேர்வின்படி நிரப்பப்படாமல் காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்களை எப்படி நிரப்பப்போகிறீர்கள்? என்பது குறித்த விளக்கத்தை பொது சுகாதாரம் இயக்குனர், மருத்துவ பணிகள் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Next Story