ஒரு பவுன் ரூ.32,576-க்கு விற்பனை: தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஒரு பவுன் ரூ.32,576-க்கு விற்பனை: தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2020 9:00 PM GMT (Updated: 23 Feb 2020 8:15 PM GMT)

தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. தங்கத்தின் விலை நேற்று (நேற்று முன்தினம்) ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 576 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்த உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சீனாவை வதைத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பவுன் தங்கம் ரூ.32 ஆயிரத்து 576-க்கு விற்கப்படும் நிலையில், அதில் ரூ.4 ஆயிரத்து 72 இறக்குமதி வரியாகும். சராசரியாக 10 சதவீதம் சேதாரம் வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதற்கான தொகையாக ரூ.3 ஆயிரத்து 257, ஜி.எஸ்.டி.யாக ரூ.1,076 ஆகியவையும் தங்கத்தின் விலையுடன் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக ஒரு பவுன் தங்க நகை வாங்க சராசரியாக ரூ.36 ஆயிரத்து 959 செலவிட வேண்டியது இருக்கும். அதில் ரூ.8 ஆயிரத்து 455 வரியாகவும், சேதாரமாகவும் செலுத்த வேண்டியது இருக்கும். தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளையும், சேதத்தையும் திணிப்பது நியாயமல்ல. இது ஏழைகள் இல்ல திருமணத்துக்கு தடையாக இருக்கும். இது மாற்றப்பட வேண்டும். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த பயனை தரவில்லை.

தங்க கடத்தலை ஊக்குவிக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும். இறக்குமதி வரியை குறைத்து தங்க கடத்தலை கட்டுப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் ஒரு பவுன் தங்கம் வாங்குவதற்கான செலவு ரூ.5 ஆயிரம் வரை குறையும். இதை கருத்தில் கொண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கவோ, கணிசமாக குறைக்கவோ அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story