கோவையில் நவீனமுறையில் கள்ளநோட்டுகள் அச்சடித்த 3 பேர் கைது


கோவையில் நவீனமுறையில் கள்ளநோட்டுகள் அச்சடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2020 9:30 PM GMT (Updated: 23 Feb 2020 9:05 PM GMT)

கோவையில் நவீனமுறையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கட்டுக்கட்டாக வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, 

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

உடனே போலீசார் சோதனையிட்டபோது அவர்களிடம் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 300 இருந்தன. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள், கோவை வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது (வயது 66), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (39) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சூரியகுமார் (30) என்பவர் கள்ளநோட்டுகளை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது. உடனே சூரியகுமாரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் மற்றும் நவீன முறையில் அச்சடித்த 100, 200, 500, 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தமாக 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை தடாகம் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த சூரியகுமார் என்பவர் கணுவாய் பகுதியில் கணினி மையம் நடத்தி வந்தார். அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே அவர், ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் கைதான கிதர் முகமதுவை அணுகியுள்ளார். அப்போது, கள்ளநோட்டுகளை ஜெராக்ஸ் எந்திரம் மூலம் எப்படி தயாரிப்பது, அதில் ஒரிஜினல் நோட்டுகள் போல மின்னும் இழைகளை சேர்ப்பது எப்படி? என்பது குறித்து கிதர் முகமது கற்றுக்கொடுத்துள்ளார்.

அதோடு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்தால் தானும், மகேந்திரனும் புழக்கத்தில் விட தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து சூரியகுமார் கடந்த மாதம் முதல் கள்ளநோட்டுகளை அச்சடிக்க தொடங்கியுள்ளார். கள்ளநோட்டுகளை அச்சடிக்க பிரத்யேகமாக காகிதங்களை வாங்கி சரியான அளவில் வெட்டி, பின்னர் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். பின்னர் ‘லேமினேஷன்’ கருவி மூலம் ரூபாய் நோட்டுகளில் மின்னும் இழைகளை பொருத்தி கள்ளநோட்டுகளை அச்சடித்து உள்ளனர்.

பின்னர் அவற்றை கட்டுக்கட்டாக ‘ரப்பர் பேண்ட்’ போட்டு கட்டி புழக்கத்தில் விட தயாராக வைத்திருந்தனர். அவற்றை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் புழக்கத்தில் விட வந்தபோது சிக்கிக்கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story