நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2020 11:00 PM GMT (Updated: 23 Feb 2020 10:55 PM GMT)

நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக அறிவியல் தேர்வை நடத்தின.

இந்த தேர்வில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் அபிநயா (தகப்பனார் பெயர் வெங்கடாசலம்) என்ற மாணவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்துக்கு செல்ல உள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு தமிழக அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருப்பது, அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் இதுபோன்று பல்வேறு சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் இந்த தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் நிதியினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story