பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு


பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2020 12:00 AM GMT (Updated: 23 Feb 2020 11:50 PM GMT)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை, 

மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கக்கூடிய ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த கூடிய பணி உங்களுக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு 2 பணிகள் இருக்கிறது. ஒன்று அரசாங்கத்தின் பெயரில் கடன் வாங்குவது. 2-வது அப்படி கடன் வாங்கிய பணத்தை கொள்ளையடிப்பது. இந்த 2 பணிகளில் தான் அவர்கள் சாதனை செய்து இருக்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது. கோமா நிலையில் இருக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. தமிழக அரசின் கடன் தொகை 4 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு ஜெயலலிதா நினைப்பு வரவில்லை. ஆனால் இந்தாண்டு கடைசி காலக்கட்டத்தில் நினைப்பு வந்து சட்டசபையில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என்று 110-வது விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். பெண் குழந்தைகள் பாதுகாப்பை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. பெண்கள் பாதுகாப்பு லட்சணத்தை பற்றி வேதனையோடு சொல்கிறேன், பொள்ளாச்சி என்று ஊர் பெயரை சொல்வதற்கே வெட்கப்படுகிறார்கள். அங்கு 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்து இருக்கிறார்கள். இது 8 ஆண்டுகளாக நடந்து இருக்கிறது.

இன்றைக்கு கூட ஒரு செய்தி வந்திருக்கிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு சில வீடியோக்கள் குறித்து அவனது சொந்தங்களிடம் கூறியுள்ளார். அந்த வீடியோவை எடுத்து கொண்டு அதில் தொடர்புடைய வி.ஐ.பி.யிடம் காண்பிக்கப்பட்டது. அவர்கள் லட்சக்கணக் கில் பணம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் வி.ஐ.பி. மகன் சிக்கி இருக்கிறான். இந்த லட்சணத்தில் பெண்கள் பாதுகாப்பு என்று சொல்லலாமா? இன்னும் 12 மாதங்கள் தான் இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு நாம் தான் ஆட்சி. ஆட்சிக்கு வந்தபிறகு பொள்ளாச்சி விவகாரத்தை சும்மா விடமாட்டோம். யார் விட்டாலும், இந்த ஸ்டாலின் விட மாட்டான். பொறுத்து இருந்து பாருங்கள். உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி திடீரென்று சில அவதாரங்களை எடுக்கிறார். அதில் தற்போது எடுத்திருப்பது விவசாயி என்ற அவதாரம். தஞ்சை பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பது கபட நாடகம். இது குறித்து மத்திய அரசிடம் விவாதித்து இருக்கிறீர்களா? ஏற்கனவே அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்னவாகும். வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும். திருச்சி, கரூர் மற்றும் அரியலூரை ஏன் இதில் சேர்க்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பொய் சொல்லி வெற்றி பெற்றோம் என்றார்கள். அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் அறிவித்தார்கள் என்ன ஆனது. அங்கு வைத்த பெயர் பலகை கூட இப்போது இல்லை. தமிழன்னை சிலை வைப்போம் என்றார்கள். அது என்ன ஆனது. அவர்கள் தான் பொய் சொல்லுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story