ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - திருமாவளவன் பேட்டி


ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2020 10:00 PM GMT (Updated: 24 Feb 2020 8:44 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆலந்தூர், 

ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் சிறுமிகள், பெண்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்குரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக சக்திகளும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்-அமைச்சர் விரைவில் அறிவிக்கவேண்டும்.

தமிழக அரசு ரூ.4½ லட்சம் கோடி கடன் இருப்பதாக அறிவித்து உள்ளது. அந்த கடனை திருப்பி அடைக்கவேண்டும். அந்த பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. வேளாண் மண்டல பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்யாமல் எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க முடியும்?. இது ஒரு ஏமாற்று மோசடி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story