ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 12:15 AM GMT (Updated: 25 Feb 2020 12:04 AM GMT)

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு முதல்-அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உள்பட அமைச்சர்கள், கட்சி அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்த தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதன்பிறகு அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கட்சி தொண்டர்கள் 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சத்தையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 109 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தை குடும்ப நல நிதியாகவும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

மேலும் கட்சி தொண்டர் ஒருவரது குழந்தைகளுக்கு ‘ஜெய்ஜீவன்’, ‘ஜெயஸ்ரீ’ என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

பின்னர் கட்சி அலுவலக வளாகத்தில் கட்சி இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து தொண்டர்கள்-பொதுமக்களுக்கு பிரிஞ்சி, சாம்பார் சாதம், கேசரி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில் 72 கிலோ எடை கொண்ட ‘கேக்’கை வெட்டி தொண்டர்கள்-பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

பொதுவாக அ.தி.மு.க. அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போது, அவரது கார் நேரடியாக அலுவலக வளாகத்துக்கு வரும். அதன்பிறகு அவர் இறங்கி நேரடியாக அலுவலகத்துக்கு செல்வார். நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்க காத்திருந்தனர்.

இந்தநிலையில் தொண்டர்களின் உற்சாகத்தை கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதி வழியிலேயே காரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்து தொண்டர்கள் வரவேற்பை ஏற்றபடி நடந்தே அ.தி.மு.க. அலுவலகம் வந்தார். 

Next Story