நானும் விவசாயி என்று சொல்பவர்களின் ஆட்சியில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? - கே.என்.நேரு கேள்வி


நானும் விவசாயி என்று சொல்பவர்களின் ஆட்சியில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? - கே.என்.நேரு கேள்வி
x
தினத்தந்தி 25 Feb 2020 9:00 PM GMT (Updated: 25 Feb 2020 6:56 PM GMT)

நானும் விவசாயி என்று சொல்பவர்களின் ஆட்சியில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? என்று தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழ்நாட்டு விவசாயத்தை சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு தன்னை விவசாயியாக காட்டி கொள்வது பச்சைத்துரோகம் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். உடனே பழனிசாமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி “மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்திவிட்டார்” என்று கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசவில்லை. நானும் விவசாயிதான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொள்வதன் மூலமாக விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தக்கூடாது என்பது தான் எங்களுடைய தலைவரின் குற்றச்சாட்டு.

‘இது மம்பட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, சேற்றில் மிதித்த கால்’ என்று ‘நானும் ரவுடி தான்’ பாணியில் சேலத்தில் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவருடைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்? மண் வெட்டியை பிடித்து விவசாயிகளின் வாழ்க்கையைத் தான் வெட்டினார்.

குடிமராமத்து பணி உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்வதற்கு கையெழுத்து போட்டதால், அவருடைய கையில் ஊழல் கறை தான் இருக்கிறதே தவிர, நிலத்து மண் இல்லை. அவரது கால் கழனிகளில் உள்ள சேற்றில் படவில்லை. ஊழல் சேற்றில் மூழ்கி கிடக்கிறது. அதுவும் எடுக்க முடியாத அளவுக்கு புதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக ‘நானும் விவசாயி’ என்று வேஷம் போட்டுக்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

தன்னை எடப்பாடி பழனிசாமி விவசாயி என்று சொல்லிக்கொள்வதன் மூலமாக உண்மையான விவசாயிகள் தலைகவிழ்கிறார்கள். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்வதை தமிழ்நாட்டு விவசாயிகள் விரும்பவில்லை. ஏற்கனவே விவசாயிகளின் வாழ்க்கை நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறது. அதில் இவரது பேச்சு மட்டுமல்ல, விவசாயி வேஷமும் அறுவறுப்பாக இருக்கிறது. இந்த கபட வேடங்களை விட்டுவிடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story