ஒரு வாரத்துக்கு பிறகு குறைந்தது: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.592 சரிவு


ஒரு வாரத்துக்கு பிறகு குறைந்தது: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.592 சரிவு
x
தினத்தந்தி 25 Feb 2020 10:00 PM GMT (Updated: 25 Feb 2020 8:58 PM GMT)

ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்தது. ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 736-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பீதியில் சர்வதேச சந்தையில் தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களின் மீதான முதலீடு பாதித்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.752 அதிகரித்து பிரமிப்பூட்டியது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 166-க்கும், பவுன் ரூ.33 ஆயிரத்து 328-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று சரிந்தது. கிராமுக்கு ரூ.74 குறைந்து ரூ.4 ஆயிரத்து 92-க்கும், பவுனுக்கு ரூ.592 குறைந்து ரூ.32 ஆயிரத்து 736-க்கும் விற்பனை ஆனது.

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் ரூ.592 குறைந்திருப்பது இந்த ஆண்டில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலை சரிவு ஆகும். கடந்த 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 902-க்கும், பவுன் ரூ.31 ஆயிரத்து 216-க்கும் விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் அதன் விலை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று குறைந்திருக்கிறது.

இதைப்போல வெள்ளியின் விலையும் குறைந்திருக்கிறது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 90 பைசா குறைந்து ரூ.52.30-க்கும், கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.52 ஆயிரத்து 400-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

இதுகுறித்து சென்னை தங்கம்- வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகையில், ‘அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள் ளது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்திருக்கிறது. இருந்தபோதிலும் வரும் நாட்களில் தங்கம் விலை உயர்வதற்கே வாய்ப்புள்ளது’ என்றார்.

Next Story