அ.தி.மு.க. ஆட்சிக்கு தினமும் விளம்பரம் செய்யும் ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி


அ.தி.மு.க. ஆட்சிக்கு தினமும் விளம்பரம் செய்யும் ஸ்டாலின் -  முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 26 Feb 2020 9:52 AM GMT (Updated: 2020-02-26T15:43:35+05:30)

நாங்கள் விளம்பரம் செய்ய தேவையில்லை அ.தி.மு.க.ஆட்சிக்கு தினமும் ஸ்டாலின் விளம்பரம் செய்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சை

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா இன்று  தஞ்சையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படியாக மக்களாகிய உங்களால் முதல்வராக இருக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது.

நாள்தோறும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து  நாங்கள் விளம்பரம் செய்துகொள்ள வேண்டிய தேவையே இல்லை. ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என்று தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஏன், என்ன கோபம் என்று தெரியவில்லை. பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகிவிடமுடியாது என்கிறார்.

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், அப்போது விவசாயி என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை. விவசாயி என்றாலே ஒரு பெருமையான விஷயம். அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் விவசாயிகள். மற்றவர்களெல்லாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். விவசாயிகள் மட்டும்தான் சொந்தக் காலில் நிற்பார்கள். அடுத்தவரிடம் கையேந்தாத கூட்டம்.

சொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது. இரவு - பகல் பாராமல், மழை - வெயில் என பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம்.  பச்சைத் துண்டு போடுவதற்கும் விவசாயி என்கிற தகுதி வேண்டும். பச்சை துண்டு அணியும் தகுதி விவசாயிக்கு  மட்டுமே உண்டு என கூறினார். 

Next Story